இதற்காக தான் அந்த இடத்தில் அனுமதி மறுத்தோம் – ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்!

கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் கூறியுள்ளார்.

tvk vijay in karur

கரூர்:தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இதில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் கரூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் கவின் (31) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின்போது உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கரூர், திருச்சி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, “காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 400 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார். சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “தவெக முதலில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் கூட்டத்திற்கு அனுமதி கோரியது. ஆனால், அந்த இடம் ஆபத்தானது—ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மறுபக்கம் அமராவதி ஆறு மற்றும் பாலம் இருப்பதால், பெரிய கூட்டத்தை நடத்த முடியாது என விளக்கினோம். பின்னர், அவர்கள் கோரிய உழவர் சந்தைப் பகுதி மிகவும் குறுகலான இடம். எனவே, வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். தவெக இதை ஏற்று, மனு கொடுத்து அனுமதி பெற்றது.”

அவர் மேலும் கூறுகையில், “500 போலீஸார் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால், தவெக 10,000 பேர் என்று கூறியிருந்தாலும், 27,000-க்கும் மேற்பட்டோர் கூடினர். நெரிசல் தகவல் கிடைத்த பிறகே ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. கல்வீச்சு அல்லது மின்தடை போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. இது குறித்து முழுமையான விசாரணை நடைபெறும்.” எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது 4 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக, இந்த நிகழ்வை “திட்டமிட்ட சதி” என்று கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி முறையீடு செய்துள்ளது. “இது விபத்து இல்லை. சிறப்பு அமர்வு அமைத்து ஆராய வேண்டும்,” என்று தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் தெரிவித்தார். விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 29 மதியம் 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதே சமயம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.10 லட்சம், பிரதமர் மோடி ரூ.2 லட்சம், விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கரூர் மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.