அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்! அதிமுக, காங்கிரஸ், விசிக, மநீம, தவெக…

தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய தீர்மானங்களை முன்மொழிந்தார். அதனை வரவேற்று அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

TN CM MK Stalin- Jayakumar - Kamalhaasan - TVK Anand

சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளதாகவும் , அப்போது தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஜெயக்குமார் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.மணி (பாமக), திருமாவளவன் (விசிக), ஆனந்த் (தவெக) ஆகிய முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என 2000ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் உறுதியளித்ததுபோல, 2026ஆம் ஆண்டிற்கு பிறகும் 30 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவத்தில் மாற்றம் ஏற்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுமே பாதிக்கப்படும் என்றும், இதனால் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், எனவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது என முதல்வர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தென்னிந்திய எம்பிகளை ஒருங்கிணைத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குழு அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். முதலமைச்சர் பேசிய கருத்துக்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். சிலர் அவர்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.

ஜெயக்குமார் (அதிமுக) :

1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அப்போது தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து தென் மாநிலங்கள் மக்கள் தொகையை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளன. வடமாநிலங்களில் அதனை செய்யவில்லை. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் திறம்பட செயல்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்கும் தண்டனை. தமிழகத்தில் தற்போதுள்ள 39 தொகுதிகள் இருக்கும்படி தொகுதி நிர்ணயம் செய்தாலே போதுமானது.  மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தமிழகத்தின் சராசரிஎண்ணிக்கையை மாற்றாமல் இருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து கொள்கிறோம் என அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) :

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதனை முறியடிக்க முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டுக்கள். மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதியில் எந்தவித மாற்றமும் இருக்காது என கூறினார். ஆனால், உ.பி, பீகார், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த மாட்டோம் என எந்த இடத்தியும் கூறவில்லை. இதில் இருந்தே இவர்கள் திட்டத்தை நாம் அறிவோம். ஆதலால், முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்களை நங்கள் வழிமொழிகிறோம் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

திருமாவளவன் (விசிக) :

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த முன்னெச்செரிக்கை  உணர்வை ஏற்படுத்தி இதன் மூலம் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என நினைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். நம்மைப்போல ஜனநாயக நாடான அமெரிக்காவில் 100 ஆண்டுகள் கடந்தும் அதே எண்ணிக்கையில் தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளது. நமது நாடாளுமன்ற எண்ணிக்கையிலும் இதே எண்ணிக்கை சமநிலை தொடர வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் முன்மொழிந்துள்ள தென் மாநில எம்பிக்கள் கூட்டுக்குழு அமைப்பது தொடர்பான நடவடிக்கை தேவையானதாக கருதுகிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் (பாமக) :

தொகுதி மறுசீரமைப்பு பற்றிய அனைத்துக்கட்சி கூட்டம் அவசியம் அவசரம் என பாமக வலியுறுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு வந்து தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறைக்கமாட்டோம் என பேசினாரே தவிர, வடமாநிலங்களில் எவ்வளவு உயர்த்துவோம் என்று சொல்லவில்லை. இதில் இருந்தே தொகுதி மறுசீரமைப்பு பற்றி அவர்கள் ஆலோசிக்கிறார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக அனைத்து தென் மாநில முதலமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் (மநீம) :

கொள்கை முரண்களை விட்டுவிட்டு மக்களுக்காக ஓடி வந்த அனைத்து கட்சிகளுக்கு பாராட்டுக்கள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள்.  தொகுதி மறுசீரமைப்பு பற்றி தற்போது மத்திய அரசு ஏன் பேசுகிறது என்பதை கவனிக்க வேண்டும். நமது நாட்டில் தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளே போதும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

கீ.வீரமணி (தி.க) :

இது தமிழ்நாட்டின் பிரச்சனை என்பதை அனைவரும் உணர வேண்டும்.  தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. நம் மாநிலத்தின் பிரச்சனை என்பதை அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உணர வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆனந்த் (தவெக) :

இந்தியாவில் தற்போதுள்ள 543 தொகுதிகள் என்ற எண்ணிக்கையே போதும். தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்.  அதனால் தொகுதி மறுசீரமைப்பு என்பது இப்போது தேவையற்றது . நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு கிடைத்திருக்கும்  பரிசா இது என தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்