“மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தவெக தலைவர் விஜயின் முதல் பேட்டி!
மதுரை விமான நிலையத்தில் தனக்காக காத்திருக்கும் மக்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். அவரை காண விமான நிலையம் முன்பு தவெக தொண்டர்கள் பலர் கூடியுள்ளனர். இதனால் அங்கு போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படியான சூழலில், சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களிடம் பேசினார். அந்த பேட்டியில், “அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க உள்ளேன்.
மதுரை விமான நிலையத்தில் என்னை காண வந்திருக்கும் அனைவருக்கும் கோடான கோடி நன்றி. தற்போது ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல உள்ளேன். கூடிய சீக்கிரம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மதுரை மக்களை சந்திக்க வருகிறேன். இப்போது நான் எனது வேலையை பார்க்க சென்று விடுவேன். நீங்களும் உங்களுக்கான வேலையை சென்று பார்க்க வேண்டும். பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்.
என் வாகனத்தை பின்தொடர்ந்து அதிவேகமாக யாரும் வர வேண்டாம். ஹெல்மெட் அணியாமல், பைக் மீது ஏறி யாரும் பின் தொடர வேண்டாம்.வேறு ஒரு சந்திப்பில் நான் உங்களை சந்திக்கிறேன். இதனை மதுரையில் சொல்ல முடியமா என தெரியவில்லை. அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என தெரியவில்லை. அதனால் இப்போது சொல்கிறேன். ” என மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்காக விஜய் பேட்டியளித்துள்ளார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜயின் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.