பரப்புரையின் போது மின் கம்பங்கள், மரங்கள் மீது ஏறக்கூடாது – தவெக விஜய் அறிவுரை.!

நாளை கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் தலைமை கழகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

tvk

சென்னை :தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், நாளை நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பரப்புரை  முடித்துவிட்டு, அதனை தொடர்ந்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் நண்பகல் 12.00 மணிக்கு பிரச்சாரம் செய்யவுள்ளதாக அக்கட்சியின் தலைமை கழகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

எனவே, கட்சியின் தலைவர் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது, தொண்டர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தவெக தலைமை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தலைவர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்டு சுவர்கள்,  மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களைக் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது” என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

unknown node