அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை -செம்மலை!

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் Ego-வை விட்டுவிட்டு கட்சியை காப்பாற்ற வேண்டும் என செம்மலை தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, இன்று காலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்ட நிலையில், மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

செம்மலை பேசுகையில், “அதிமுக தலைவர்களிடையே ஈகோ பிரச்சனை நிலவுகிறது. கட்சியை வளர்க்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கம் இன்று பலவீனமாகிவிட்டது. தொடர்ந்து கட்சியில் பயணிக்க என் மனம் இடமளிக்கவில்லை. எனவே அதிமுகவிலிருந்து விலகுகிறேன்” என்றார்.

மேலும் அவர், “த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் இந்த இயக்கத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று சொன்னால், அந்த அளவுக்கு நம்முடைய இயக்கத்தை நாம் அசைக்க முடியாத வலுவான இயக்கமாகக் காட்டத் தவறிவிட்டோம் என்றுதான் பொருள். மற்றவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. நம்மை அவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

கட்சியில் புதியவர்களைச் சேர்ப்பது குறித்து பேசிய செம்மலை, “யார் வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம். அது பொதுச் செயலாளர் அல்லது தலைவரின் முடிவு. ஆனால் அப்படி சேருபவர்கள் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். கழகத்திற்கு விரோதமாக யாரும் நடக்கக் கூடாது” என்றார்.

எந்த முக்கிய முடிவை எடுக்கும்போதும் மூத்த தலைவர்கள், முன்னணி தலைவர்கள் உட்கார்ந்து கலந்து பேசி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்பது தனது ஆலோசனை என்றும் செம்மலை வலியுறுத்தினார்.அதிமுகவில் தொடரும் உள்கட்சி மோதல் மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், மூத்த தலைவரான செம்மலையின் விலகல் கட்சியின் எதிர்காலத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.