விஜய்யெல்லாம் வந்துட்டாரு..திமுக எம்பி சொன்ன சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை!

பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய் என அண்ணாமலை அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

annamalai tvk vijay

சென்னை :திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறையை எதிர்த்து, முருக பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் புதுச்சேரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், முருக பக்தர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டி, சுதேசி மில் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் மேடையில் தீபத்தூண் போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். “கம்முனு இருக்கும் இடத்தில் கம்முனு இருக்கணும், கும்முனு இருக்குற இடத்தில் கும்முனு இருக்கணும் என்றுதான் விஜய் இருக்கிறார். ஒரு பக்கம் நிக்கணும் அல்லது மறுபக்கம் நிக்கணும், ரோட்டுக்கு நடுவுல நின்றால் அடிபட்டுதான் போவார்” என்று அவர் விமர்சித்தார்.

விஜய் புதுச்சேரி வந்தபோது சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசியதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “பெரும்பான்மையினர் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது. பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த விமர்சனம், தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

மேலும், டெல்லியில் ஒரு திமுக எம்.பி.யைச் சந்தித்தபோது அவர் கூறியதை நினைவுகூர்ந்த அண்ணாமலை, “விஜய்யெல்லாம் வந்துட்டாரு… மைனாரிட்டி ஓட்டு இந்தப் பக்கம் கொஞ்சம், அந்தப் பக்கம் கொஞ்சம்னு போறமாதிரி இருக்கு… ஏதாவது ட்ராமா பண்ணி 100% இந்தப் பக்கம் வைத்தால்தான் 1, 2 ஓட்டாவது பெறமுடியும்” என்று அந்த எம்.பி. தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

விஜய்யெல்லாம் வந்துட்டாரு..திமுக எம்பி சொன்ன சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை!