மதுரை த.வெ.க. மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களுக்கு நடுவே விஜய்.!

அண்ணா, எம்ஜிஆர் உடன் விஜய் இருப்பது போலவும் ‘வரலாறு திரும்புகிறது' என்ற வாசகத்துடனும் மதுரை தவெக மாநாட்டு மேடையில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

TVK Maanadu

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி கிராமத்தில், 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை ஜூலை 16 அன்று நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் எதிர்கால திட்டங்கள், தேர்தல் உத்திகள், மற்றும் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க உள்ளார். மேலும், தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு, தண்ணீர், மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கட்சியின் கொள்கைகளான சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றிய விளக்கங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) மாநாட்டு மேடையில் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாதுரை (அண்ணா) மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) ஆகியோரது படங்களுக்கு நடுவே நடிகர் விஜய்யின் படம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மேடையில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் கூடிய கட்அவுட் அமைக்கப்பட்டு, கவனத்தை ஈர்த்துள்ளது.