சென்னை :தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் பிரதமர் மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ” கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று.
‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று” எனவும் பேசியிருந்தார். அந்த வீடியோ இன்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டு இருந்தது.
அந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விஜயகாந்த் குறித்து புகழ்ந்து பேசியிருக்கிறார். இது குறித்து மோடி தன்னுடைய பதிவில் கூறியதாவது “எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்! நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்” எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
unknown node