விஜய் வீட்டில் செங்கோட்டையன்! த.வெ.கவில் இணைவது உறுதி?

50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த மூத்த தலைவரான செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

sengottaiyan meet vijay

சென்னை:  தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று காலை திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்ததால், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் எம்எல்ஏ பதவி விலகல் பல்வேறு யூகங்களை எழுப்பியது.

ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே செங்கோட்டையன் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். தவெக மாநில இளைஞ்றாணி துணைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனின் காரில் செங்கோட்டையன் சென்றது கூடுதல் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே செங்கோட்டையன் திமுக அல்லது தவெகவில் ஒன்றில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. காலையில் திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவரை சந்தித்துப் பேசிய நிலையில், மாலையில் விஜயை நேரடியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் தற்போது உறுதி செய்யப்பட்டதாகவே தெரிகிறது. விஜயை நேரில் சந்தித்து பேசியது இணைப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தவெகவில் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்தும் பரவலான யூகங்கள் எழுந்துள்ளன. கட்சியின் மாநிலத் தலைவர் என். ஆனந்துக்கு இணையாக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு வலுவான செல்வாக்கு கொண்ட செங்கோட்டையன் தவெகவில் இணைவது அந்தப் பகுதியில் விஜயின் கட்சிக்கு பெரிய உந்துதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் வருகை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு மிகுந்த பலத்தை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தற்போது விஜயின் இல்லத்தில் நடைபெற்று முடிந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் அதிகாரப்பூர்வ இணைப்பு எப்போது அறிவிக்கப்படும், அவருக்கு என்ன பொறுப்பு ஒதுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.