திருவாரூர் :தவெக தலைவர் விஜய், இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பரப்புரை செய்தார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற இந்தப் பரப்புரையில், அவர் மக்களைச் சந்தித்து உரையாற்றினார். பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக பச்சை துண்டு அணிந்து வந்ததால் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
பரப்புரையின் போது, விஜய் திமுகவை நேரடியாக தாக்கி பேசினார். திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோவில், ஆழித்தேர் தான் உடனே நினைவுக்கு வரும். திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம். திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என கருணாநிதிக்கு திமுகவினர் புகழாரம் சூட்டி வருவதாக குறிப்பிட்ட அவர், நன்றாக ஓட வேண்டிய தமிழகம் எனும் தேரை நாலாப் பக்கமும் கட்டையை போட்டு ஸ்டாலின் நிறுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் திருவாரூர் கருவாடாக காய்கிறது என்றும் அவர் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் என உங்கள் குடும்பத்தினரிடம்தான் சொல்ல முடியும், மக்களிடம் அல்ல. நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்படுகிறது.
நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ஒரு டன்னுக்கு ரூ.1000 கமிசன் வாங்குகிறார்கள். கடந்த 4 ஆண்டில் டெல்டா பகுதி விவசாயிகளிடமிருந்து பல கோடி திருடியிருக்கிறார்கள், விவசாயிகளுக்கு 40/40 என்றால் அவர்களது வயிற்றில் அடித்த கமிஷன் என்று பொருள். நாங்கள் பொய்யான தேர்தல் அறிக்கையை தரமாட்டோம், எது நடைமுறை சாத்தியமோ, அதைதான் வாக்குறுதியாக தருவோம்”
