முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி புகார்.!

பழனியில் ரூ.2,700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

mk stalin anbumani

சென்னை :பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு முருகன் வரலாறு என்ற பெயரில் விற்கப்படும் ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் புகைப்படங்களும் கருத்துகளும் அதிகளவில் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று, பழனியில் பக்தர்களிடம் முருகன் மாநாட்டு மலர் விற்கப்படுவதை சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அன்புமணி, ”முருகன் மாநாட்டு மலரில் முதல்வர், துணை முதல்வரின் கருத்துக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதுடன், பக்தர்களை கட்டாயப்படுத்தி விற்கப்படுகிறது.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அய்யோ பாவம்… திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது” என்று விமர்சித்துள்ளார்.

முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி புகார்.!