சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை மண்டல நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கே.ஜி.அருண்ராஜ், செய்தியாளர்களிடம் பேசியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் நாளுக்கு அடுத்த நாள் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறினார். “முதலமைச்சர் எப்போது செய்தியாளர்களை சந்திக்கிறாரோ அதற்கு அடுத்த நாள் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்” என்று அவர் தெரிவித்தார்.
OFF THE கேமராவில் பேட்டி கொடுக்கும் விஜய் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து பேசிய அருண்ராஜ், தவெகவின் தேர்தல் அறிக்கை மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள், சங்கங்களின் கோரிக்கைகள் ஆகியவை மனுக்களாக சமர்ப்பிக்கப்பட்டு, விஜய் நேரடியாக கண்காணிப்பார் என்றும் அவர் கூறினார்.
ஆட்சி அமைந்தவுடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்வோம் என்றும் உறுதியளித்தார்.கூட்டணி குறித்து பேசிய அருண்ராஜ், “கூட்டணி குறித்து நான் பொதுவெளியில் பேச முடியாது. தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்பவர்களோடு தான் கூட்டணி. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கூட்டணிக்காக கூட்டணிக்கு அழைப்பதற்காக சொல்லவில்லை. இது கொள்கை சார்ந்த முடிவு” என்று தெளிவுபடுத்தினார். தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அதிமுகவின் விமர்சனங்களை கடந்து செல்வதாகவும், திமுகவின் மக்கள் விரோத செயல்களை மட்டுமே எடுத்துச் சொல்வதாகவும் அருண்ராஜ் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் “ஊழல் கட்சி” என்று அதிமுகவை விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “பேசியவரின் பின்னணி என்ன? நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை” என்று பதிலளித்தார். விஜய் யாரையும் ஊழல் செய்ய விடமாட்டார், தன்னுடன் உள்ளவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டார் என்று அவர் உறுதியாகக் கூறினார்.
கருத்துக் கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இல்லை என்ற கருத்துகளை மறுத்த அருண்ராஜ், “மக்களின் முழு ஆதரவை பெற்று தவெக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தவெகவின் அரசியல் பயணம் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றி பெறும் என்றும், 2026 தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார். இந்த பேட்டி தவெகவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
