தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? – தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!

தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

vijay TVK angry

சென்னை :தமிழகத்தில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 43 பேர் தரமற்ற மதிய உணவு உண்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசின் சத்துணவு திட்டத்தின் தரம் குறித்து பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் குழந்தைகளின் உயிர் பாதுகாப்பில் அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் நடந்து காவல் நிலையத்தை அடைந்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் 7 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் இதேபோன்ற கொடூரத்தை காட்டுகிறது. இத்தகைய சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன என்று விஜய் விமர்சித்துள்ளார்.நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை போன்ற இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சென்னை காசிமேடு பகுதியில் இளம்பெண் திமுக நிர்வாகியால் வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் உதைக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கு வன்கொடுமை செய்யப்பட்டது. சென்னை திரிசூலம் பகுதியில் இரட்டைக்கொலை நடைபெற்றது. இவை அனைத்தும் கடந்த ஒன்றரை வாரங்களுக்குள் நடந்துள்ளன.

இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தமிழக மக்களின் மனங்களை உலுக்கி எடுத்துள்ளன என்று விஜய் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.திமுக அரசு சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் ஆகியவற்றில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக விஜய் குற்றம்சாட்டியுள்ளார். “இந்த சம்பவங்களை அறிந்தால் யாருக்கும் வருத்தமும் அதிர்ச்சியும் ஏற்படும்.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இவற்றை கண்டுகொள்ளாமல் கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்” என்று அவர் விமர்சித்துள்ளார். இந்த அரசு வெட்கங்கெட்ட ஆட்சி என்றும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.இந்த திமுக அரசை மக்கள் விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றுவார்கள் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டியது மக்களின் கடமை” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கண்டனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.