சென்னை :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நேற்றைய தினம் (செப்டம்பர் 17) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பின், தனியாக மற்றொரு காரில் முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி சென்றார் என்று செய்திகள் பரவியது.
இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது செய்தியாளர் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தேன். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன். அதனை வீடியோவாக எடுத்து ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து அவதூறாக செய்தி வெளியிடுவது சரியல்ல.
இப்படி தரம் தாழ்ந்து அரசியல் செய்திருப்பது ஏற்புடையதல்ல. நான் உள்துறை அமைச்சரை சந்திப்பதாக முறையாக சொல்லிவிட்டு, அரசு காரில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பகிரங்கமாகதானே சென்றேன், இதை ஏன் ஒரு முதலமைச்சர் விமர்சிக்க வேண்டும்? இனி ரெஸ்ட்ரூம் சென்றால்கூட, இந்த ரெஸ்ட்ரூம் போகிறேன் என்று சொல்லிவிட்டுதான் போக வேண்டும் என்ற அளவுக்கு செய்கின்றனர்” என்று வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக ஆளுங்கட்சியான பிறகு, தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரையெல்லாம் விமர்சித்தார்களோ அவர்களையே ரத்தனக்கம்பளம் வைத்து வரவேற்றனர். பிரதமரை அழைத்து கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் உட்பட பல நிகழ்ச்சிகளை நடத்தியதையெல்லாம் பார்த்தோம், எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் விட்டனர். ஆளுங்கட்சியானவுடன் வெள்ளைக்குடை பிடித்தனர். இதுதான் திமுக-வின் நிலைப்பாடு” என்று கூறினார்.
