ஈரான் :வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரான் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் மீதான தாக்குதலின் பின்னணியில் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக உலக எண்ணெய் வர்த்தகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி, ஷியா-சன்னி முஸ்லிம் மோதல்களைத் தூண்டுதல், ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ் (3H) போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவி செய்வது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. கமேனியின் சர்வாதிகார ஆட்சி முறையும் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது. “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரை இலக்கு வைத்துத் தாக்குவது ஐநா சாசனத்திற்கு எதிரானது. இது ஆட்சி மாற்றத்தை வலுக்கட்டாயமாக திணிக்கும் ஏகாதிபத்திய செயல்” என்று காங்கிரஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்றும் கட்சி விமர்சித்துள்ளது.தற்போது ஈரானுக்கு எதிரான போரில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஈரானுடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் தரப்பில் ராக்கெட் தாக்குதல்களைத் தடுக்கும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் (ஐரன் டோம் போன்றவை) தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை பெரிய அளவிலான அதிரடி தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்த நேரமும் பதிலடி தாக்குதல் தொடங்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி மீது பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சிவிலியன் இலக்குகளை நோக்கியது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இது உலக அளவில் மனித உரிமை மீறல் என்ற கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
