வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் நடத்திய உரையில், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் அமெரிக்காவுக்கு பெருமளவு வருவாய் குவிந்து வருவதாக பெருமையுடன் தெரிவித்தார். அதே சமயம், இந்த உரையின் போது ட்ரம்ப் “தனது நிர்வாகத்தின் முதல் 43 நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் விவரித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “உலக நாடுகள் மீதான வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது. இந்த வரிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், இந்த மிகப்பெரிய தொகைகளை மீண்டும் பெறுவதற்கு அமெரிக்காவுக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது. வரலாற்றில் என்னைப் போன்று சோதனைகள், இன்னல்களை கடந்து வந்தவர் யாரும் இல்லை,” என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார். “நாம் 43 நாட்களில், பல நிர்வாகங்கள் 4 அல்லது 8 ஆண்டுகளில் செய்யாதவற்றை சாதித்துள்ளோம். முதல் மாதம் மிக வெற்றிகரமானதாக இருந்தது,” என்று பெருமை பொங்க கூறினார். அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், அமெரிக்க குடிமக்களுக்கு மலிவு வாழ்க்கையை உறுதி செய்யவும், ஆற்றல் செலவுகளை குறைப்பதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்தார்.
அதே சமயம் “woke” கொள்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து, பள்ளிகளில் இருந்து critical race theory-ஐ நீக்கியதாகவும், ஆண்கள் பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை தடை செய்ததாகவும் கூறினார். எல்லை பாதுகாப்பு குறித்து பேசிய அவர், தனது முதல் நாளில் தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனப்படுத்தி, புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை வரலாற்றில் இல்லாத அளவு குறைத்ததாக பெருமை பேசினார்.
மேலும், இந்த உரையில், ட்ரம்ப் பல சர்ச்சைக்குரிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர், பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்குவதாக அறிவித்தார். ட்ரம்பின் உரை, குடியரசுக் கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றாலும், ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உரையின்போது, ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆல் க்ரீன், “மெடிகேய்டு நிதியைக் குறைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை,” என்று கூச்சலிட்டதால், அவர் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
