வாஷிங்டன் :அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 28, 2026 அதிகாலை தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேல் இதை முன்னெச்சரிக்கை தாக்குதல் (pre-emptive strike) என்று அழைத்து, ஈரானின் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக என்று கூறியுள்ளது.
அமெரிக்காவும் இணைந்து இந்த தாக்குதலில் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Truth Social-இல் வெளியிட்ட 8 நிமிட வீடியோவில், “அமெரிக்க ராணுவம் ஈரானில் மிகப் பெரிய போர் நடவடிக்கைகளை (major combat operations) தொடங்கியுள்ளது” என்று அறிவித்தார். ஈரான் அமெரிக்காவுக்கு எதிராகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை தகர்த்து, கடற்படையை அழிப்பதே இலக்கு என்று வலியுறுத்தினார்.
ட்ரம்ப் வீடியோவில் ஈரானிய ராணுவத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்: “இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் போலீசுக்கு சொல்கிறேன்… இன்று இரவுக்குள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் மரியாதையாக நடத்தப்படுவீர்கள். இல்லையென்றால் உறுதியாக மரணமடைவீர்கள்.” ஈரானியர்களுக்கு “உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள்” என்று அழைப்பு விடுத்து, ஆட்சி மாற்றத்தை (regime change) வலியுறுத்தினார்.
அமெரிக்க மக்களை பாதுகாப்பதே முதன்மை இலக்கு என்றும், ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.தாக்குதல் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கெர்மன்ஷா, கராஜ் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுள்ளது. தெஹ்ரானில் பல இடங்களில் வெடிப்புகள் நடந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தரப்பில் பதிலடி தாக்குதல் தொடங்கியுள்ளதாகவும், இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும் தகவல்கள் உள்ளன.
ஈரான் அவசரநிலை அறிவித்துள்ளது.இந்த தாக்குதல் ஜெனீவாவில் நடந்த அணு ஆயுத பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு திடீரென நடந்துள்ளது. ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தினால் மோதல் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளது.
