ஈரான் :மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கு முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் மோதலை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் எதிரொலியாக ஈரானுடன் நெருங்கிய கூட்டணியில் உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று லெபனான் முழுவதும் பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், லெபனான் தலைநகர் பெய்ரூத் உட்பட நாடு முழுவதும் ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. பெய்ரூத் நகரின் தெற்குப் பகுதிகள், பெகா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணை மற்றும் போர் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இஸ்ரேல் இதை ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகள், தளபதிகள் இருக்கும் இடங்களை அழிக்கும் நடவடிக்கை என்று விளக்கியுள்ளது.லெபனான் அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் சிவிலியன்கள் என்றும், 149 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூத் நகரின் தெற்குப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால், பெரும் அச்சம் நிலவுகிறது. லெபனான் அரசு தனது ராணுவத்தை எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் இந்த பதிலடியைத் தொடங்கியுள்ளது. ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களைத் தடுக்கும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் (ஐரன் டோம்) தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆனால் லெபனான் மீதான இன்றைய தாக்குதல் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுள்ளது.இந்தப் போர் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளது. ஈரான் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வருவதால், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் முழு பிராந்தியப் போராக மாறும் அச்சம் நிலவுகிறது. லெபனான் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுவதோடு, பெய்ரூத் நகரில் பல இடங்களில் மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். சர்வதேச சமூகம் இந்த மோதலைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
