CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
ஐபிஎல் 2025-57 வது போட்டியில் கொல்கத்தா அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக, அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 48 ரன்கள் எடுத்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 38 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்தனர். மேலும், சுனில் நரைன் 26 ரன்களும், ரெஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னும், ரிங்கு சிங் 9 ரன்களும், ராமன்தீப் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில், ரகுவன்ஷியை தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்ஷுல் கம் போஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஒரு வழியாக, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து.
இந்த பெரிய இலக்கை நோக்கி அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மற்றும் டேவன் கான்வே இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிரடியாக ஆடிய அறிமுக வீரர் உர்வில் பட்டேல் 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
பின்னர், அஷ்வின் 8 ரன்னிலும், ஜடேஜா 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் பவர் பிளே முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. குறிப்பாக, வைபவ் அரோரா வீசிய 11 ஓவரை டிவால்ட் பிரேவிஸ் வெளுத்து வாங்கினார். 6, 4,4,6, 6,4 30 என ஒரே ஓவரில் மட்டும் ரன்களை குவித்து அசத்தினார்.
முதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், பிரேவிஸ் சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டார். அதிரடியாக விளையாடிய டிவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில், 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை அணி. இந்த தோல்வியின் மூலம், தனது பிளே ஆஃப் வாய்ப்பையும் தவறவிட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.