ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!
இந்திய வீரர்கள் மனதளவில் வலிமையானவர்கள் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட் பாராட்டி பேசியுள்ளார்.

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்த ‘கைகுலுக்கல்’ முயற்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா (89 ரன்கள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (80 ரன்கள்) தங்கள் சதங்களை நெருங்கியிருந்தபோது, ஸ்டோக்ஸ் ஆட்டத்தை ட்ரா (சமநிலை) செய்யலாம் என்று கூறி, ஆட்டத்தை முடிக்க முயன்றார். ஆனால், ஜடேஜா இதை ஏற்கவில்லை, “போய் பந்து வீசு,” என்று கூறி ஆடினார். இதனால் கோபமடைந்த ஸ்டோக்ஸ், ஜடேஜாவுடன் வாக்குவாதம் செய்தார்.
இந்த சம்பவத்தை, முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட், “இந்தியாவை குறை கூற முடியாது,” என்று ஆதரித்து, ஸ்டோக்ஸை விமர்சித்தார். இது குறித்து பேசிய அவர் “இந்திய வீரர்கள் கடுமையாக உழைத்து, அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்கள். அவர்கள் சதம் அடிக்க விரும்பியது தவறில்லை. ஆனால், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஸ்டோக்ஸ் ‘இன்னும் எவ்வளவு நேரம் ஆடுவீர்கள்?’, ‘எங்கள் பந்தில் சதம் அடிக்கிறீர்களா?’ என்று கேலி செய்தார்கள். இப்படி பேசியவர்கள், இந்தியா ஏன் ட்ராவை ஏற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டோக்ஸ், புரூக், டகெட், ஆர்ச்சர் ஆகியோர் இந்திய வீரர்களை வம்புக்கு இழுத்தார்கள். ‘புரூக்குக்கு எதிராக சதம் அடிக்கிறீர்களா?’ என்று ஸ்டோக்ஸ் கேட்டார். இப்படி கேலி செய்தவர்கள், இந்திய வீரர்கள் ட்ராவை ஏற்கவில்லை என்று கோபப்படுவது அநியாயம்,” என்று பாய்காட் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஸ்டோக்ஸ், ஹாரி புரூக்கை அழைத்து, மிக எளிதாக பந்து வீசச் செய்ததை, “விளையாட்டு மனப்பான்மைக்கு எதிரானது,” என்று பாய்காட் விமர்சித்தார்.இந்திய அணி, 311 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஜடேஜா-வாஷிங்டனின் 203 ரன்கள் கூட்டணியால் ஆட்டத்தை ட்ரா செய்தது. பாய்காட், “இந்திய வீரர்கள் மனதளவில் வலிமையானவர்கள். தங்கள் விக்கெட்டை காப்பாற்றி, சிறப்பாக ஆடி சதம் அடித்தார்கள். இதற்கு அவர்கள் தகுதியானவர்கள்,” என்று பாராட்டினார். மேலும், இங்கிலாந்து பந்துவீச்சு பலவீனமாக இருந்ததாகவும், “ஜோஃப்ரா ஆர்ச்சர் தவிர மற்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆர்ச்சர் மிகவும் சோர்வாக இருந்தார்,” என்றும் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய பாய்காட், “இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி கேலி செய்கிறார்கள். இது அடுத்த ஓவல் டெஸ்டிலும் (ஜூலை 31, 2025) தொடரலாம்,” என்று எச்சரித்தார். இந்திய கேப்டன் சுப்மன் கில் , “ஜடேஜாவும் வாஷிங்டனும் சதம் அடிக்க தகுதியானவர்கள்,” என்று ஆதரித்தார். இந்த சர்ச்சை, கிரிக்கெட்டில் தனிப்பட்ட சாதனைகளுக்கும் அணியின் முடிவுகளுக்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்திய நிலையில், பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.