டெல்லி :அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20, 2025) அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் இருந்து தற்போதைய துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுப்மன் கில் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இது அவரது ஃபார்ம் காரணமாக இல்லை. அணியின் ஒருங்கிணைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மைக்காகவே இந்த முடிவு. நாங்கள் டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பரை வைத்திருக்க விரும்பினோம். ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை சேர்க்க வேண்டிய தேவை இருந்தது.
சுப்மனின் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை; அவர் சிறந்த வீரர்” என்று விளக்கினார்.தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் இது குறித்து பேசியபோது, “தொடர்ச்சி (Continuity) இங்கு முக்கியம். சுப்மன் துணை கேப்டனாக இருந்தார். அவர் அணியில் இல்லாத நிலையில், அந்த பொறுப்பை யாராவது ஏற்க வேண்டியிருந்தது. முன்பு டெஸ்ட் போட்டி கமிட்மென்ட் காரணமாக அவர் டி20-யில் விளையாடாதபோது அக்ஷர் படேல் துணை கேப்டனாக இருந்தார். புதிய மாற்றங்களைத் தவிர்த்து, அணியின் நிலைத்தன்மையைத் தக்கவைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்திய அணியில் உள்ள வீரர்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).இந்த அணி தான் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் களமிறங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
