INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதிலாக சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் இந்திய அணியின் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு, அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடிய கருண் நாயர், 21.83 சராசரியுடன் 131 ரன்கள் மட்டுமே எடுத்தார், இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 40 ரன்கள் ஆகும். இந்த தொடரில் முக்கியமான இடத்தில் இறங்கி பேட்டிங் செய்த அவர், தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை எடுக்கத் தவறியதால், அணி நிர்வாகம் அவரை நீக்க முடிவு செய்தது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கருண் நாயருக்கு பதிலாக இளம் வீரர் சாய் சுதர்ஷனை மூன்றாவது இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். சுதர்ஷன், முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 ரன்கள் எடுத்து, அதன் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் 2025 ஆட்டங்களில் சிறப்பான செயல்பாடு, அவருக்கு மற்றொரு வாய்ப்பை பெற்றுத் தந்தது.
முன்னாள் வீரர் ரவி ஷாஸ்திரி, கருண் நாயரின் மனநிலையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார், குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் ஒரு எளிய பந்தை விட்டு விக்கெட்டை இழந்ததை விமர்சித்தார்.முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக், கருண் நாயரின் மனநம்பிக்கை மற்றும் ஆட்ட முறை குறித்து கேள்வி எழுப்பினார். “கருண் நம்பிக்கையுடன் ஆடினால், அவரை தொடரலாம். ஆனால், அவரது மனநிலை தயக்கமாக இருந்தால், இளம் வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சுதர்ஷனின் இளம் வயது, இடது கை பேட்டிங், மற்றும் மூன்றாவது இடத்திற்கு பொருத்தமான ஆட்ட முறை ஆகியவை அவருக்கு ஆதரவாக இருந்தன. இதனால், இந்திய அணி நிர்வாகம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சுதர்ஷனை மீண்டும் அணியில் சேர்க்க முடிவு செய்தது. கருண் நாயருக்கு பதிலாக அந்த இடம் சுதர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் எப்படி விளையாடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.