மும்பை : ஏப்ரல் 12 அன்று வான்கடே ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், 241 ரன்கள் இலக்கைத் துரத்திய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித், 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சினை காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
கிரிக்கெட் இணையதளமான Cricbuzz-இன் தகவலின்படி, ரோஹித் சர்மாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, காயத்தின் தீவிரம் கண்டறியப்படும். அடுத்த போட்டியான ஏப்ரல் 16 அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது பங்கேற்பு ஸ்கேன் அறிக்கையைப் பொறுத்தே அமையும்.
போட்டிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் வீரர் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“நான் டக்-அவுட்டில் இருந்ததால் முழு விவரம் தெரியவில்லை. ஆனால் அது ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது” என்றார்.
இதே போட்டியில் ஆர்சிபி அணியின் விராட் கோலியும் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தாலும், பின்னர் களத்தில் இல்லை.காலில் ஏற்பட்ட அணுக்காயம் (ankle injury) என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் LSG அணியின் கிருணால் பாண்டியா, “விராட் நலமுடன் இருப்பார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக உள்ளது. அணியாக நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்” என்று கூறினார்.
