விராட் கோலி கன்பார்ம் 10,000 ரன் அடிப்பார்...மிட்செல் மெக்கலெனகன் கணிப்பு!

விராட் விரைவில் 10,000 ரன்களை எட்டுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என மிட்செல் மெக்கலெனகன் தெரிவித்துள்ளார்.

Hero Image

டெல்லி : ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியைப் பாராட்டி, முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்ளெனகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் முன்னாள் கேப்டான விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக உருவெடுத்துள்ளார். இந்த சாதனையை அவர் 275வது ஐபிஎல் போட்டியில் அடைந்தார்.ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய மிட்செல் மெக்ளெனகன், கோலியின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டைப் பாராட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் "விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆட்டக்காரர். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 9,000 ரன்கள் குவிப்பது எளிதான காரியம் அல்ல. இது பசி, ஒழுக்கம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றின் விளைவு. அதனால்தான் அவர் தொடர்ந்து சிறந்து விளங்குகிறார்” என்றார்.

மெக்ளெனகன் மேலும் கூறுகையில், “கோலி 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது தொடக்க வீரராக அல்ல, கீழ் நடுத்தர வரிசையில் பேட்டிங் செய்தார். தனது இடத்திற்காக போராடினார். பின்னர் மூன்றாவது வரிசைக்கு மாறினார். அதன் பிறகு கிறிஸ் கெயிலுடன் தொடக்க வீரராக ஆடினார். இது அவரது ஆட்டத்தை முழுமையாக மாற்றியது. அவர் விரைவில் 10,000 ரன்களை எட்டுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, பல்வேறு காலகட்டங்களில் தன்னை மாற்றிக்கொண்டு ஆதிக்கம் செலுத்திய வீரர்” என்று பாராட்டினார்.

தற்போது கோலி 275 போட்டிகளில் 9,012 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 40.05 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 133.05 ஆகவும் உள்ளது. 8 சதங்கள் மற்றும் 66 அரைசதங்கள் அடித்துள்ள அவர், தற்போது ஐபிஎல் 2026 சீசனில் 8 போட்டிகளில் 351 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியில் RCB அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர் குமார் (3/5) மற்றும் ஜோஷ் ஹேஸ்வுட் (4/12) ஆகியோரின் அபார பந்து வீச்சால் டெல்லி அணி 75 ரன்களுக்கு சுருண்டது. பதிலுக்கு RCB அணி 6.3 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.