சென்னை :சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் சீசனுக்காக பெரிய மாற்றத்துக்குத் தயாராகி வருகிறதாம். 2025 சீசனில் அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது காரணமாக, புதிய வீரர்களை சேர்க்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, தமிழக ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் தன் சொந்த மண்ணான சென்னை அணிக்குத் திரும்பப் போகிறார் என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி, வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் ₹3.2 கோடி ரூபாய்க்கு டிரேடு செய்ய ஒப்பந்தம் செய்யத் தயாராக உள்ளதாம். இதே தொகைக்கு 2025 ஏலத்தில் அவர் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அந்த அணியில் அவர் பவர் ப்ளே ஸ்பின்னரும், இறுதி கட்டத்தில் ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேனாகவும் முழுத் திறமையைக் காட்ட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுவே சென்னை அணிக்கு ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது. தங்கள் பழைய தமிழ் வீரரை மீண்டும் தாயக அணிக்குக் கொண்டு வந்து, அணியின் சமநிலையை சரி செய்யும் முயற்சியில் சிஎஸ்கே இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர், பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுக்கக் கூடிய திறமை கொண்டவர் மட்டுமல்ல, திடீர் ஆட்டங்களில் தாக்கம் செலுத்தும் திறமையுள்ள ஆல்-ரௌண்டரும் ஆவார் எனவே, அவரை எடுக்க அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதால், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேரடியாக வாஷிங்டன் சுந்தரிடம் பேசி உறுதிப்படுத்தினார்.வாஷிங்டன் சுந்தர் அஸ்வினிடம், “இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. சிஎஸ்கே-ஜிடி அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம், ஆனால் எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது” என்று தெளிவாகக் கூறினார். இதன்மூலம், அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், “அணியில் மகிழ்ச்சியாக இருந்தேன். எனது ஆட்டத்திறன் முன்னேறியது” என்று அஸ்வினிடம் தெரிவித்தார். அவர் ஜிடியில் தொடர விரும்புவதாகவும், ஆனால் அணி நிர்வாகத்தின் முடிவை ஏற்பதாகவும் கூறினார்.முடிவாக, சிஎஸ்கே வாஷிங்டன் சுந்தரை வாங்க உள்ளது என்ற செய்தி இன்னும் உறுதியாகவில்லை. அணிகளுக்கு இடையே பேச்சு நடந்திருக்கலாம் என்றாலும், வீரருக்கு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
