ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?
ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகியதாக தகவல் வெளியானது.

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பெண்கள் ஆசிய கோப்பை, செப்டம்பரில் நடைபெறும் ஆண்கள் ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியானது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வதந்திகள் வெளிவந்தன. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால், இந்திய அணி பங்கேற்க இயலாது என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆசியக் கோப்பையிலிருந்து விலகுவதாகத் தெளிவாக மறுத்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, “எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, முடிவையோ இதுவரை பிசிசிஐ செய்யவில்லை. ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது” என்று கூறியுள்ளார்.