3 மாதத்தில் கஞ்சா போதை ஒழிக்கப்படும் - டிடிவி தினகரன்!

பட்டாம்பூச்சிகளையும், புதிய விட்டில் பூச்சிகளையும் பார்த்து ஏமாறாதீர்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அம்மா மக்கள்) தலைவர் டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல் 23, 2026) சென்னை அடையாறு, தாமோதராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த தனது பார்வையை விரிவாக விளக்கினார்.அவர் கூறியதாவது:“நன்றாக யோசித்து, தமிழ்நாட்டின் நலன், தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், மாணவர்களின் எதிர்காலம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதை மருந்துகள் மூன்று மாதத்திற்குள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி பேணிக் காக்கப்பட்டதோ, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் எப்படி வழங்கப்பட்டதோ, அதேபோல் அம்மா ஆட்சிக் காலத்தில் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும், தற்போதைய திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டன.இந்தத் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும்.

அம்மா எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, அண்ணன் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) அவர்கள் முன்னெடுப்பார்.எனவே, அண்ணா தி.மு.க. தலைமையிலான எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

இளைய சமுதாயத்தினரும், அனைத்து மக்களும் தங்கள் வாக்குகளை வீணடிக்காமல், சிதறடிக்காமல், பட்டாம் பூச்சிகளையும், புதிய வெட்டுப் பூச்சிகளையும் பார்த்து ஏமாறாமல், என்றென்றும் உங்களுடன் இருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தொண்டர்களுக்கும், அம்மா அவர்களின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கும், இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ்நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதி எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.