சினிமாவை உயிருக்குயிராய் நேசித்தவர் ஏவிம் சரவணன் – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

சினிமாவை உயிருக்குயிராய் நேசித்தவர் ஏவிம் சரவணன் என நடிகர் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :ஏவிஎம் ஸ்டுடியோவின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலி செலுத்த வந்த ரஜினி, சரவணனின் உடலருகே நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த ஏ.வி.எம் சரவணன் சார் நல்ல மனிதர்… ஜென்டில்மேன் என்ற வார்த்தைக்கே உதாரணம் இவர்தான்” என்று உருக்கமாகத் தொடங்கினார்.

“சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர் சரவணன் சார். என்மீது ரொம்ப அன்பு வைத்திருந்தார். என்னுடைய கஷ்ட காலங்களில் துணையாக இருந்தவர். என்னுடைய நலனை எப்போதும் விரும்பியவர். அவர் இல்லாமல் நான் இந்த இடத்தில் இருக்க முடியாது” என்று கண்கள் கலங்க பேசினார் ரஜினி. ஏவிஎம் தயாரிப்பில் தான் நடித்த 9 படங்களும் (முரட்டுக் காளை, பொக்கிஷம், பணக்காரன், பாண்டியன், வள்ளி உள்ளிட்டவை) பெரும் வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், “அந்த 9 படங்களும் ஹிட் ஆனதற்கு முழுக்க முழுக்க காரணம் சரவணன் சார்தான். அதைச் சொன்னால் மிகையாகாது” என்றார்.

“சார் இல்லை என்ற செய்தி கேட்டதும் என் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டுச்சு. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்று உணர்ச்சிவசப்பட்ட ரஜினி, சரவணனின் குடும்பத்தினரைத் தேற்றினார். “அவருடைய ஆசை, அன்பு, அக்கறை எல்லாம் எங்களை விட்டு போய்விட்டது போல் இருக்கு” என்று வேதனை தெரிவித்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் ரஜினி நடித்த படங்கள் தமிழ் சினிமாவின் தங்கக் காலத்தின் மைல்கற்கள் என்பதால், இந்த இரங்கல் திரையுலகில் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியைத் தவிர, கமல்ஹாசன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகரன், சிவகுமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலி செலுத்தினர். “சினிமாவுக்கு உயிர் கொடுத்த மாமனிதர்” என்று அனைவரும் ஒருமித்து பாராட்டினர். சரவணன் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ரஜினி மீண்டும் வலியுறுத்தினார். சூப்பர் ஸ்டாரின் இந்த உருக்கமான இரங்கல், சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. “ரஜினி சொல்வது போல ஜென்டில்மேனுக்கு உதாரணம் சரவணன் சார்தான்” என்று ரசிகர்களும், திரையுலகினரும் துக்கம் பகிர்ந்து வருகின்றனர்.