சென்னை :கோவையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண மோசடி குற்றச்சாட்டு வைத்து சென்னை போலீஸில் புகார் அளித்தார். தன்னை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவர் புகார் செய்தார். இதன் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாய் கிரிஸில்டா, போலீஸ் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று கூறி மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இதற்கு பதிலடியாக ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவுடன் நடந்த திருமணம் மிரட்டலால் நடத்தப்பட்டது என்றும், அது தன்னிச்சையானது இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் செய்து தான் தந்தை என்று நிரூபிக்கப்பட்டதால், காலம் முழுக்க பொறுப்பேற்க தயார் என்றும் கூறினார். ஜாய் கிரிஸில்டா மூன்று வீடியோக்கள் வெளியிட்டு ரங்கராஜின் கூற்றுகளை மறுத்தார்.
இந்நிலையில், இத்தனை மாதங்கள் அமைதியாக இருந்த ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு ஜாய் கிரிஸில்டாவை கடுமையாக விமர்சித்தார். ஸ்ருதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “என் கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது, எங்கள் குடும்பத்தை பிரிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் உண்மையான நோக்கம். தனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம், யாரையும் பிரிக்க விரும்பவில்லை என்று ஜாய் ஊடகங்களில் கூறினாலும், அது பொய்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஜாய் கிரிஸில்டா ஊடகங்களை தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். தன் கணவருடன் உறுதியாக நிற்பேன், இறுதிவரை காப்பாற்றுவேன் என்றும் ஸ்ருதி உறுதி தெரிவித்தார். ஸ்ருதி பிரியா ஆதாரமாக ஜாய் கிரிஸில்டாவின் சொந்த கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதத்தையும், வாட்ஸ்அப் உரையாடல் ஸ்கிரீன்ஷாட்களையும் வெளியிட்டார். அந்த கடிதத்தில் ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும், உடனடியாக ரூ.10 லட்சம் தர வேண்டும், மாதம் ரூ.8 லட்சம் வழங்க வேண்டும், ஒரு வீடு வாங்கித் தர வேண்டும் என்று கோரியுள்ளார். இது ஜாயின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவதாக ஸ்ருதி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். போலீஸ் உரிய விசாரணை நடத்தவில்லை என்று அவர் கூறினார். இந்த மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறைக்கு நவம்பர் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சர்ச்சை தமிழ் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ருதி பிரியாவின் அறிக்கையும் ஆதாரங்களும் ஜாய் கிரிஸில்டாவின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவருடைய மனைவி அறிக்கையை வெளிட்டுள்ளார்.
