சென்னை :பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இல் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 243 தொகுதிகளில் 202 இடங்களை NDA கைப்பற்றியது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) 89 இடங்களிலும், ஜனதா தள ஐக்கியம் (ஜே.டி.யூ.) 101 தொகுதிகளில் போட்டியிட்டு 85 இடங்களிலும் வென்றன. எதிர்க்கட்சி மகா கட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களிலும் மட்டுமே வென்றன.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம். அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் நிதிஷ் குமாரின் தீர்க்கமான வெற்றிக்கு வாழ்த்துக்கள். பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர் நலம் பெற வாழ்த்துகிறேன்” என்றார். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரச்சாரத்தையும் அவர் பாராட்டினார்.
ஸ்டாலின் மேலும் கூறியதாவது: “நலத்திட்ட உதவிகள், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி, இறுதி வாக்கு எண்ணப்படும் வரை அர்ப்பணிப்புடன் கூடிய மேலாண்மை ஆகியவை தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாகத் திட்டமிட வேண்டும்.” என கூறினார்.
அதேநேரம், தேர்தல் ஆணையத்தின் (ECI) செயல்பாடுகளை விமர்சித்த ஸ்டாலின், “இந்தத் தேர்தல் முடிவு ECI-யின் தவறுகளையும் பொறுப்பற்ற செயல்களையும் மறைத்துவிடாது. ECI-யின் நற்பெயர் அடிமட்டத்தில் உள்ளது. இந்நாட்டு மக்கள் வலிமையான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தை எதிர்பார்க்கின்றனர்; தோற்றவர்களிடமும் நம்பிக்கை ஊட்டும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.பீகாரில் ECI-யின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். NDA-வின் பெரும் வெற்றி இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு ECI-யின் செயல்பாடுகள் காரணம் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
