பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதி – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

BJPGovernment

பீகார் :பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

அந்த மாநில அரசு சார்பில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒரு பெண்ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்ளார்.

இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “மகளிர் சுய தொழில் தொடங்க வழங்கப்படும் இந்த நிதியை திருப்பி செலுத்தத் தேவையில்லை” எனவும் பேசியுள்ளார். இந்தத் திட்டம் பெண்களின் தொழில் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக வழங்கப்படும் இந்த நிதியைத் தொடர்ந்து, ஆறு மாத ஆய்வுக்குப் பிறகு, பயனாளிகளின் தொழில் திறனைப் பொறுத்து ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் லட்சாதிபதி தீதி இயக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும் முயற்சியாகும்.