சென்னை :அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குவோருக்கு எஸ்மா (Essential Services Maintenance Act) சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
எஸ்மா சட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை, பதுக்கல் போன்றவற்றை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது. இது வீட்டு உபயோக சிலிண்டர்களை முறையாக விநியோகம் செய்யவும், பதுக்கலை தடுக்கவும் உதவும்.வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களில் (ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள்) மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனை சமாளிக்க மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் உள்ள உணவகங்கள் போன்ற அத்தியாவசிய சேவை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.BPCL உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து சீராக விநியோகம் செய்யப்படுவதாகவும், வணிக சிலிண்டர்களுக்கு மட்டுமே தற்காலிக கட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. போர் முடிவடையும் வரை இந்த நிலை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
