'கரூர் துயர சம்பவத்தை அன்புமணி நாகரீகமற்ற முறையில் கொச்சையாகப் பேசி இருக்கிறார்' – அன்பில் மகேஸ் கண்டனம்.!

வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.

Anbil Mahesh -Anbumani Ramadoss

கரூர் :கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் அன்பில் மகேஸ், சம்பவ நடந்த நாளன்று கரூரில் சிகிச்சையில் இருப்பவர்களை பார்க்க வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை பார்த்து “படிச்சு படிச்சு சொன்னேனே.. கண்டிஷன ஃபாலோ பண்ணுங்கன்னு… கேட்டீங்களா” என்று கண்ணீர்விட்டு அழுதார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ”கரூர் துயர சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும். மக்களை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது. அவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில் என்ன நடந்தது என்று கண்டறிய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தற்பொழுது, அதற்கு பதில் கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் ”கரூர் துயர சம்பவத்தை அன்புமணி ராமதாஸ் நாகரீகமற்ற முறையில் கொச்சையாகப் பேசி இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில், கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள்.

அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்.

unknown node