#Breaking:கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது – மதுரையில் பரபரப்பு!

#Breaking: 150 college students arrested - Madurai riots!

மதுரை:நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளதால் பரபரப்பு.

கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மேலும், மாணவர்கள்,ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தினர்.இதனால் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்  என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து,பொறியியல்,கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,3 வது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.கல்லூரிகளில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று போராட முயன்ற 150 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அரசு பாலிடெக்னிக்,மன்னர் திருமலை நாயக்கர் உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது கொரோனா கட்டுப்பாடுகளை மீறுதல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.