”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற பா.ஜ.க. அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.கவை அடக்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பொறுப்பு அமைச்சர்களை நியமிப்பது, கட்சி வளர்ச்சி, செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு கொடுப்பது, இளைஞர்களை ஊக்குவிக்க முக்கிய பதவி வழங்குவது, தேர்தல் வியூகம், பொதுக்குழுவை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை முடிந்த பின் இந்த கூட்டத்தில், மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பழனிசாமி பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார், பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது.
அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல் மூலம் அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். பாஜகவின் அரட்டல், மிரட்டல், உருட்டல்கள் அனைத்துக்கும் உண்மையான காரணம் மக்களுக்கு தெரியும். பாஜக அச்சுறுத்தலை அரசியல்ரீதியாக எதிர்கொள்வோம்.
நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும்.
வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும், வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவர் திறமைவாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரது வெற்றிக்கு உழைக்க வேண்டியது உங்கள் கடமை” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025