தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? விளக்கம் கொடுத்த கிரிஷ் சோடங்கர்!

தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

girish chodankar

சென்னை :தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாகப் பேசினார். “திமுகவுடனேயே கூட்டணி செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளோம். ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுகவுடன் நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டணி உள்ளது” என்று தெரிவித்தார்.

தவெகவுடன் கூட்டணி குறித்த வதந்திகளை மறுத்த கிரிஷ் சோடங்கர், “தவெகவுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதுபோன்ற தகவல் வதந்தி. நாங்கள் யாரும் சொல்லவில்லை” என்று தெளிவுபடுத்தினார். தொகுதிப் பங்கீடு விரைந்து முடிக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த உட்கட்சி பிரச்சினை குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “இதுபோன்ற உட்கட்சி விவகாரங்கள் பொது வெளிக்கு செல்லக் கூடாது.

ஜோதிமணி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்திய அவர், உட்கட்சி பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்க்க வேண்டும் என்று கூறினார்.விஜய் – பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், “தமிழகத்தில் யாரோ ஒருவர் யாரோ ஒருவரைச் சந்தித்தால் நாங்கள் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இது தவெகவுடனான கூட்டணி வதந்திகளை மறைமுகமாக மறுத்ததாகப் பார்க்கப்படுகிறது.கிரிஷ் சோடங்கரின் இந்தப் பேட்டி தமிழ்நாடு காங்கிரஸின் கூட்டணி உத்தியை தெளிவுபடுத்தியுள்ளது. திமுகவுடனான கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. உட்கட்சி பிரச்சினைகளை விசாரிக்க குழு அமைத்தது கட்சியின் ஒற்றுமைக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கு முன் காங்கிரஸின் நகர்வுகள் கவனம் பெறுகின்றன.