சென்னை : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தங்களது கட்சி தொண்டர்களின் மனநிலையை வெளிப்படையாக கூறியதற்காகவே சிலர் கோபப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வைகோ, "மற்ற கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு வெறும் நான்கு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இது எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. இதையே நான் ஒரு தொலைக்காட்சி நேர்காணலிலும் வெளிப்படையாக கூறியிருந்தேன்" என்றார்.
மேலும், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மதிமுக தொண்டர்கள் மனதில் தொகுதி பங்கீடு குறித்த வருத்தம் இருந்தது. அதுமட்டுமல்லாமல், நாங்கள் அனைவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. ஒரு தொகுதியிலாவது எங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி கிடைக்கும் என்று முதலில் கூறப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவும் மாற்றப்பட்டு, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டது. அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்று தெரிவித்தார்.
இதனை கூறியதற்காக சிலர் கோபப்படுவதாக குறிப்பிட்ட வைகோ, "நான் எந்த புதிய அரசியல் முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தை சொன்னாலே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் கோபப்படுகிறார்கள். அவர்களின் கோபத்தை நான் உரிமையோடு எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.
அதே நேரத்தில், கூட்டணி கட்சிகளின் தற்போதைய நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். "மற்ற கட்சிகள் பல தொகுதிகளை பெற்றிருந்தும், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுவிட்டன. ஆனால் நாங்கள் அப்படிப்பட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை. கூட்டணியில் இருந்தபடியே வேறு அரசியல் நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை" என்று கூறினார்.
