சென்னை :தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கடுமையாக விமர்சித்துள்ளார். தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 354-ல் சொன்னீர்களே, செய்தீர்களா? என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம்பரம் அரசு மருத்துவமனை குறித்து நாகேந்திரன் கடுமையாகக் கூறினார். “இரண்டு மாதங்களுக்கு முன் நான் தானே தொடங்கி வைத்தேனே என்று கூற வேண்டாம். ஆட்சி முடியும் தருவாயில் ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படும் அந்த மருத்துவமனையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி கூட இல்லை. அது தான் நிதர்சனம்” என்று அவர் சாடினார்.
மருத்துவமனை கட்டும் என்று சொல்லி, ஏழை மக்களை ஏமாற்றுவது அரசின் பழக்கம் என்று நாகேந்திரன் கூறினார். சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் மருத்துவமனை கட்ட செங்கலைக் கூட திமுக அரசு நாட்டவில்லை என்று நாகேந்திரன் விமர்சித்தார். “அந்த பகுதிகளில் மருத்துவமனை கட்டவும் அரசுக்கு நாட்டமில்லை. கொடுத்த வாக்குறுதிப்படி அரசு மருத்துவமனைகளை உருவாக்காது, நான்கரை ஆண்டு காலமாக ஏழை மக்களின் உடல் நலனைக் கிடப்பில் போடுவது தான் உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, வெற்று விளம்பர உலகில் மட்டும் உழன்று வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், திமுக அரசின் அகங்காரம் மக்களின் கோபத்தில் சாம்பலாகும் நாள் வெகுதூரமில்லை என்று நாகேந்திரன் எச்சரித்தார். “வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, விளம்பரங்களில் மட்டும் உழன்று வருகிறது. 2026 தேர்தலில் மக்கள் இதை மறக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
