“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்
ஒட்டு கேட்கும் கருவி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 9 அன்று மாலை 6:30 மணியளவில், அவரது இல்லத்தில் உள்ள நாற்காலிக்கு அருகே இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், பாமகவில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் மோதலின் பின்னணியில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராமதாஸ், விருத்தாச்சலத்தில் நடந்த பாமக கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஒட்டுக் கேட்கும் கருவி லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த, அதிநவீன கருவியாகும் என்று குறிப்பிட்டார். இந்த கருவி யாரால், எந்த நோக்கத்திற்காக பொருத்தப்பட்டது என்பது குறித்து தனியார் துப்பறியும் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வு முடிந்தவுடன் கருவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு, அவரை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஜூலை 15 அன்று விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கிளியனூர் காவல் ஆய்வாளர் கலையரசி மற்றும் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ராமதாஸின் இல்லத்திற்கு சென்று அவரது உதவியாளர்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், ராமதாஸ் தரப்பு ஒட்டுக் கேட்கும் கருவியை போலீசாரிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் துப்பறியும் நிறுவனம் இன்னும் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், இந்த மறுப்பு விசாரணையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இருப்பினும், ராமதாஸ் தரப்பு, விசாரணை முடிவடைந்தவுடன் கருவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.