'பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது' – வழக்கறிஞர் பாலு.!

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் (ECI) கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

PMK President Anbumani

சென்னை :பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், தனது மகன் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியதாக கடந்த செப்டம்பர் 11 அன்று அறிவித்தார். அன்புமணி “கட்சி விரோத நடவடிக்கைகள்” என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை என ராமதாஸ் கூறினார்.

ஆனால், வழக்கறிஞர் பாலு இந்த நீக்கம் “செல்லாது” என்று வாதிட்டு, கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு அதிகாரம் இல்லை,  தலைவருக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது என்று விளக்கினார். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் கே. பாலு, ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மகாபலிபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது. பா.ம.க தலைவராக அன்புமணியை தொடரச் செய்யும் தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது அன்புமணியை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அன்புமணியின் பா.ம.க. தலைவர் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிப்பதற்கு அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. பா.ம.க.வின் தலைமை அலுவலகமாக சென்னை தியாகராய நகரில் உள்ள திலக் தெருவில் உள்ள முகவரியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

தேர்தலின் போது பா.ம.க வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தை வழங்க பரிந்துரைக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு. அன்புமணியை பா.ம.க. தலைவராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் என்று கூறியதோடு அதற்கான கடிதத்தை காட்டினார்.