5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்- தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

தவெக தலைவர் விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கட்சியின் முழு தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.“மக்களின் தேர்தல் அறிக்கை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் முதல் பிரதியை ஒரு விவசாயியிடமும், இரண்டாவது பிரதியை ஒரு ஆசிரியரிடமும், மூன்றாவது பிரதியை ஒரு ஆட்டோ ஓட்டுநரிடமும் வழங்கி வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தினார் விஜய்.

தவெகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு

60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் (தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு). மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் மற்றும் ஒரு பட்டு சேலை வழங்கப்படும்.

தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும். ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும். டிப்ளமோ படித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்கப்படும்.விஜய் மேலும் கூறியதாவது:“சொல்லாததையும் செய்வோம்.

ஆட்சிக்கு வந்ததும் சொல்லாததையும் செய்வோம். அது வேறு விஷயம். ஆனால், இப்போ செய்ய முடியிறதை செய்யப் போறதை மட்டும்தான் சொல்லியிருக்கோம். சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது.”தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். இந்த அறிக்கை வெளியீடு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.