சென்னை :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய விஜய் “. “சலுகைகளுக்கு எதிரானவன் நான் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துபவன் இல்லை. ஓசி ஓசி எனக் கூறி மக்களை கேவலப்படுத்துகிறீர்களா? அதைத் தட்டிக்கேட்க நான் வருவேன்” என்று ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திமுகவை கடுமையாக விமர்சித்தது ஏன் என்று சிறுவயதில் யோசிப்பேன். இப்போது தான் புரிகிறது. திமுக ஒரு தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டி” என்று விஜய் கூறினார். “களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தினார்.
விஜய் பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரிடம் கேள்வி கேட்கப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் விஜய் வைத்த விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ” விஜயிடம் என்றைக்காவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா?” என சற்று முக மாற்றத்துடன் பதில் அளித்தார். விஜயிடம் என்றைக்காவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா?; விஜயை பேசவிட்டுப் பாருங்கள்; அப்போது தெரியும்” எனவும் பேசிவிட்டு சென்றார்.
