சென்னை :வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
