அவருக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரியல...செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்!

சில பேருக்கு தீபத்தூணுக்கும் எல்லை கல்லுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்காங்க எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

nainar nagendran sengottaiyan

சென்னை :பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெகவில் இணைந்த செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துள்ளார். “வயதில் சிறியவனாக இருந்தாலும் அண்ணன் செங்கோட்டையன் என்னை குருஜி என்றுதான் அழைப்பார். அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை திருநெல்வேலியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்கிறார். ஒருவேளை அவரே நேரடியாகப் போட்டியிடப் போகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

தவெக “எடுத்த உடனே ஆட்சிக்கு வருவோம்” என்று சொல்வதில் நியாயம் இருக்கிறதா என்று தான்தான் கேட்டதாகவும், அதற்கு செங்கோட்டையன் கோபப்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.திமுக ஆட்சியை கடுமையாகச் சாடிய நயினார் நாகேந்திரன், “திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் காஞ்சிபுரத்தில் ஒரு வார்டில் கூட ஒரு திட்டமேனும் செயல்படுத்தப்பட்டுள்ளதா? இங்குள்ள மேயர் ஒரு திட்டம் போட்டால் அதற்கு ரூ.5 லட்சம் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். கழிவுநீர் கால்வாய் திட்டம் எங்குமே செயல்படுத்த முடியாத அளவிற்கு மோசமான ஆட்சி நடக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

நயினார் நாகேந்திரன் மேலும், “திமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை” என்று கூறினார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து, “அவர் தனிப்பட்ட முடிவு. ஆனால் என்னை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று பேசுவது ஏற்கத்தக்கதல்ல” என்று கோபத்துடன் தெரிவித்தார்.

இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜகவுக்கும் தவெகவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. திமுகவுக்கு எதிரான நயினார் நாகேந்திரனின் தாக்குதல், 2026 தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் உத்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது. செங்கோட்டையன் இதற்கு பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.