குடும்ப உறுப்பினர்களை கைவிடமாட்டேன்...இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பற்றி அன்பில் மகேஸ்!

எது எப்படி இருந்தாலும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை கைவிடமாட்டேன் என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

teachers protest chennai anbil mahesh

சென்னை :தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் (SSDTU) ஒருங்கிணைப்பில் நடக்கும் இந்தப் போராட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டுள்ளது.

போராட்டக்காரர்கள், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும் போராட்டத்தைத் தொடர்வோம் என்று எச்சரித்துள்ளனர். இது ஆசிரியர்களின் உரிமைப் போராட்டமாகவும், அரசின் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்த கேள்வியாகவும் மாறியுள்ளது.போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் SSDTU பொதுச்செயலாளர் ஜே. ராபர்ட், “கடந்த தேர்தலின்போது எங்கள் கோரிக்கையை ஏற்ற திமுக அதை வாக்குறுதியாகவும் அறிவித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடு களையப்படாவிட்டால் போராட்டம் தொடரும். அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தப் போராட்டம் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறுவதால், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்தப் போராட்டம் குறித்து பேசியபோது, “இடைநிலை ஆசிரியர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். து எப்படி இருந்தாலும் அவர்களை கைவிட மாட்டேன். இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

அமைச்சர் இதை குடும்ப உறுப்பினர்களாகக் கருதி பேசியது போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.“நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம், போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த உறுதிமொழி போராட்டக்காரர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.