சென்னை :கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பிரச்சார வாகனம் சிபிஐ அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. கரூர் தாந்தோன்றி மலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜனவரி 10) இந்த வாகனம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் இணைந்து வாகனத்தை சோதனை செய்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விஜய்யின் பிரசார வாகனம் சம்பவ இடத்திற்கு எப்படி சென்றது, அதன் வருகை தாமதம், நெரிசல் ஏற்படுவதற்கு முன் ஏதேனும் எச்சரிக்கை அளிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்வதற்காக வாகனம் எடுத்து வரப்பட்டது.
வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் இணைந்து நுணுக்கமாக ஆய்வு செய்தனர். வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள், உள்ளே இருந்த பொருட்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மேலும், வாகனத்தை இயக்கிய ஓட்டுநரிடமும் சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு ஜனவரி 12ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று வாகன ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது விசாரணையின் முக்கிய அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. சம்பவத்தின் போது வாகனத்தின் வருகை தாமதம், அது ஏற்படுத்திய நெரிசல் ஆகியவை குறித்து ஆழமான விசாரணை நடக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், உண்மைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
