சென்னை :கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட விஜய், காலை 11:30 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழு 90 கேள்விகள் அடங்கிய கையேட்டை விஜயிடம் கொடுத்து பதில்களைப் பெற்றது.
விசாரணையின் போது கூட்டத்திற்கு திட்டமிட்ட நேரத்தை விட விஜய் ஏன் தாமதமாக வந்தார்?, அன்று இரவு அவசரமாக சென்னை திரும்பியது ஏன்?, கூட்ட நெரிசலை தடுக்க என்னென்ன திட்டமிடல்கள் செய்யப்பட்டிருந்தன? உள்ளிட்ட காலவரிசை சார்ந்த கேள்விகள் முக்கியமாக எழுப்பப்பட்டன. விஜய் அளித்த பதில்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
மதியம் 4 மணியளவில் விஜய் உணவு உட்கொண்டதாகவும், 10-வது தளத்தில் கட்டுக்கோப்பான சூழலில் விசாரணை நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிபிஐ அதிகாரிகள் இன்றும் விசாரணையைத் தொடர விரும்பினர். ஆனால், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (ஜனவரி 15) கால அவகாசம் கோரிய விஜயின் கோரிக்கையை ஏற்று, அடுத்த கட்ட விசாரணை பொங்கலுக்குப் பிறகு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் இன்று சென்னை திரும்புகிறார். இது கரூர் சம்பவத்தில் 41 உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையில் முக்கிய அடுத்த கட்டமாகும்.கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அக்டோபர் மாதம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு விசாரணையை கண்காணிக்கிறது.சிபிஐ ஏற்கனவே தவெக நிர்வாகிகள், விஜயின் வாகன ஓட்டுநர், முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. பிரச்சார வாகனம், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இன்றைய விசாரணை முடிவுகள் மற்றும் விஜயின் வாக்குமூலம் சம்பவத்தின் உண்மை நிலவரத்தை வெளிக்கொணரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
