கரூர் துயர சம்பவம் : விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!

விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கு நிலைமை மோசமடைந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

senthil balaji

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அரசு ரூ.10 லட்சம், பிரதமர் மோடி ரூ.2 லட்சம், விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படை ஆய்வு செய்கிறது. இப்படியான பரபரப்பான சூழலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் துயர சம்பவம் மிகவும் கொடுமையானது, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். அனைத்து கட்சியினரும் வேறுபாடு இன்றி உதவி செய்தனர். முதலுதவி, சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி,” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே நிலைமை மோசமடைந்துவிட்டது. அவர் கவனத்தை ஈர்க்க செருப்பு வீசப்பட்டிருக்கலாம். வேலுச்சாமிபுரத்தில் சம்பவத்திற்கு அடுத்த நாள் 2,000 செருப்புகள் கிடந்தன, ஆனால் ஒரு காலி தண்ணீர் பாட்டில் கூட இல்லை. கூட்டத்திற்கு குடிநீர் வழங்குவது கட்சியின் பொறுப்பு, ஆனால் தவெக தரப்பு அடிப்படை வசதிகளை கூட செய்யவில்லை. விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் இந்த பெருந்துயரம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

தவெக கேட்ட மூன்று இடங்களில் வேலுச்சாமிபுரம்தான் அதிக மக்கள் கூடக்கூடிய இடம். ஆனால், குறித்த நேரத்தில் பிரச்சாரம் தொடங்காததால், வேலை முடிந்து திரும்பியவர்களால் கூட்டம் அதிகரித்தது,” என்று செந்தில் பாலாஜி விளக்கினார்.“இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. இனி எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இதுபோன்ற துயரம் நடக்கக்கூடாது. தமிழக அரசுடன் தோள் நின்ற அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் நன்றி,” என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனத்தை சற்று தொலைவிலேயே போலீஸ் நிறுத்தச் சொன்னது ,எனவும் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றது. வாகனத்தின் ஷட்டரை மூடியதுதான் பிரச்னை கூட்டம் உள்ளே வர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்தார்களா என தெரியவில்லை கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது விஜய் வாகனத்தின் உள்ளே சென்றது ஏன்? விக்கிரவாண்டி உள்ளிட்ட அனைத்து கூட்டங்களிலும்தான் பிரச்னை ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 5 பேர் உள்ளே புகுந்து அசம்பாவித்தை ஏற்படுத்தி விட முடியுமா?விஜய் கூட்டத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை, தவெக கேட்ட இடம் தான் வழங்கப்பட்டுள்ளது கூட்டம் காலதாமதமாக நடந்த‌துதான் அசம்பாவித‌த்திற்கு காரணம்” எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.