எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

sengottaiyan speech

சென்னை :தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வகையில், மூத்த அதிமுக தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் தொகுதி உறுப்பினராக இருந்த அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவுவை நேரில் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை நேரடியாக வழங்கினார்.

இந்த நடவடிக்கை, அதிமுகவிலிருந்து அவர் சமீபத்தில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது கடந்த சில தினங்களுக்கு முன்பே நிகழ்ந்தது. கட்சித் தலைமைக்கு எதிராகவும், கட்சி ஒழுங்கீன நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உரிமை கூட பறிபோன நிலையில், செங்கோட்டையன் தற்போது எம்.எல்.ஏ பதவியையும் அவரே ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள், “விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு புன்சிரிப்புடன் பதிலளித்த செங்கோட்டையன், “இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்!” என்று சூசகமாகவே கூறினார். இந்த ஒரு வார்த்தை பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் ஏற்கனவே செங்கோட்டையனை வரவேற்பதாகவும், அவர் தவெகவில் இணைவது உறுதி என்றும் கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அவர் த.வெ.கவில் இணையவுள்ளதாகவும், விஜயை சந்தித்து இதுகுறித்து பேசியதாகவும் தகவல்கள் பரவியது. இப்படியான சூழலில் அவர் இன்று பதவியை ராஜினாமா செய்தது தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எனவே, செங்கோட்டையன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.