தேர்தல் சீசன் வந்தால் மட்டும் தமிழ்நாடு வருகிறார் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

modi vs stalin

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பிரதமர் மோடி தனது X பதிவில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது! ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளதாவது: “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும், பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன்.” இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது X பதிவில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தல் சீசன் வந்தால் மட்டும் தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே…” என்று தொடங்கிய அவர், திமுக அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்விகள்:

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?

#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி எப்போது வரும்?

பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

#MGNREGA தொடரும், #VBGRAMG கைவிடப்படும் என்ற வாக்குறுதி எப்போது வரும்?

மதுரை #AIIMS, ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

#NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவில் கூறியுள்ளார்: “தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!” என்று கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாளை மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் என்ன நடக்கும் என்பது இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.